Tuesday 26 January, 2010

எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா ஆ.. ஆ .. ஆ..........
















அபூர்வமாய் நீ 
அமைத்துக்கொள்ளும்
பிரயாணங்களால் ,
தனித்திருக்கும்
தருணங்கள் முழுதும்
"வீடு" பற்றி
விளங்கிக்கொள்ள
முடிகிறது என்னால்.

For U - Its  AWAY  FROM  HOME
For Me - Its  A" WAY "  TO  " HOME" 

Saturday 16 January, 2010

குழந்தைகளின் கேள்விகள்


குழந்தைகள் உலகம்
முழுதும்
குவியலாய் கேள்விகள்.

அவர்களின்
எல்லா கேள்விகளின்
பதில் நம்மிடம் இருப்பதில்லை
என்றாலும்,
நமக்கு பதில் தெரிந்த
எல்லா கேள்விகளையும்
அவர்கள் கேட்பதுமில்லை

சில வினாக்களின் வீச்சு
விசாலமாய்
சில விடைகளின் தேடல் போல்.

பதில் தெரியா கேள்விகளை ,
சமயங்களில்
தப்பாய் பதில் சொல்லி
சமாளிக்கலாம்,
புன்னகைத்து நகரலாம்,
எரிச்சலாய் மறுக்கலாம்.

என்றாலும் ,

பதில்லா கேள்விகளில்
நம் மனசு மாட்டிக்கொள்ள
அவர்கள்
அடுத்த கேள்விக்கு
ஆயத்தமாகி கொண்டிருப்பார்கள்.

காக்கை சோறு










அமாவாசை பூசை முடித்து
அப்பா காக்கைக்கு
இலை நிறைய வைத்த சோற்றை
எடுத்ததா, இல்லையா
கவலையில்,

வீதி கடக்கும்
பிச்சைக்காரன் குரல்
விழுவதேயில்லை
காதில்.

Thursday 14 January, 2010

இக்கரை பச்சை











என்றேனும் வாரக்கடைசி
பெருநகர் அரவமற்ற
வட்ட சாலை
வழிநடக்க,
ஊர் ஞாபகம் உள்ளுக்குள்.

பச்சைவயல் பாதை
நெட்டை மரம்,குட்டைகோயில்
ஆச்சரிய கண்களோடு
அன்பான மக்கள் என்று.

ஊர் போய், உண்டு களைத்து
ஊர் கதை கேட்டு
விட்டம் பார்த்து
விழுந்து கிடக்க,
இதயத்தின் ஓரத்தில்
இன்னிசை போல்
நகரத்து இரைச்சல்

பட பட என நடக்கும்
பட்டாம் பூச்சி பெண்கள்.
இடைவிடாது பேசும்
எப்.எம் குரல்கள்.

பறக்கும் ரயில் பர பரப்பு
பாதையோர சாப்பாடு

மாமு, மச்சிகள்
சபலப்படுத்தும் சமாச்சாரங்கள்.

இரவுகளை காவு வாங்கி
காசு கொடுக்கும்
கம்ப்யூட்டர் கடமைகள்

வழி இன்றி வகுத்த
வாழ்வின்விலாசங்கள்.

இயல்பாய்போகிறது
இந்தஎந்திரவாழ்க்கை
இனிமையாய்
இருப்பதாலும் கூட
.

Friday 8 January, 2010

30 + ( முப்பது பிளஸ் )











எங்கேயோ, எப்பொழுதோ
சந்திக்கின்ற பொழுதும்
எதை பற்றிபேசுவது
என புரியாமல்
கல்லூரி நாட்களில்
எங்களை காதலித்ததாய்
நினைத்த பெண்களை
பேசி பிரிவோம்
அவர்களுக்கு
மணமாகி போன போதும்.


Wednesday 6 January, 2010

பொய் இலக்கணம்









மழை துளி, மலர் சிதறல்
சுமந்த மறைவான சாலையில்
உன் விரல் உரச நடக்கையில்
உணர்ச்சிவசப்பட்ட என்னை
நாசூக்காய் தவிர்த்து
நடந்து போனாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

காபி கடையில்
அருகமர்திருந்தபொழுது,
உன் தந்தை கண்டு பதறிய
என்னை அமைதியாக்கி
அருகில் அழைத்துபோய்
அறிமுகப்படுத்தினாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

"இந்த புத்தாண்டிலாவது
அச்சம் தவிர்,உரக்க சொல்

 உலகுக்கு உன் காதல்"
 நள்ளிரவில்
குறுஞ்செய்தி கொடுத்தாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

தலை குனிந்து, தாலி வாங்கி
சோக புன்னகையுடன் ,
ஜோடியாய் போனாயே 
 அது
நினைவிருக்கிறது எனக்கு.



இருந்தாலும்,

 வருடம் தோறும்
வாழ்த்து சொல்ல,
உன் திருமண தேதி மட்டும்
என் மனைவி
ஞாபகப்படுத்தும்வரை
நினைவுக்கு வருவதில்லை எனக்கு.

Monday 4 January, 2010

மன் மதன்














வினையின் விடை
பாவங்களாய்

குற்றவாளிகள்
பாவம்
குறி வைக்கப்பட்டவர்களே

தண்டனை இல்லாது
தப்பி

தொடர்கிறான்,
தொடுக்கிறான்

கணை தொடுப்பு
காலகாலமாய்
.

Sunday 3 January, 2010

குற்ற உண (ர் )வு



அலட்சியமாய் அதிகம் சொல்லி,
உணவகங்களில்
உண்ணாது வீணடித்த,

எஞ்சில் தட்டுக்களை
எந்திரம் போல்
எடுத்து போகின்றவனின்
பசி உணர்ந்த பார்வைகளை

பல் குத்தும் பாவனையில்
தவிர்த்து விடுகிறேன்
எப்பொழுதும்
.