Friday 29 October, 2010

அடையாளம்





இலக்கிய சிறப்பிதழில்
ரசிக்க தகுந்த
கவிதை எழுதியிருந்த
கவிஞனின் பெயர்
அவனெழுதிய குத்து பாட்டை
அடை மொழியாய் கொண்டே
அறிவிக்கப்பட்டிருந்தது.

Saturday 2 October, 2010

மோனலிசா



உன்னை மட்டும்
உள் விளையாட்டு தோழியாய் 
கொண்டிருந்த,   
நம் மகன்
தனக்குள் பேசிய படி
தொடரும்
தனிமை விளையாட்டு
கண்டு,
உன் பிரிவின் வெறுமை 
கொன்றொழிக்க முடியாது ,
தவிக்கும் என் 
வெறித்த விழிகளில்
தெறிக்கும் நீர் வழி
பார்க்கும் பொழுதெல்லாம்
உணர்கிறேன் 
புன்னகைத்தே நீயிருக்கும்
புகைப்படத்திலும்,
எங்களை பிரிந்து 
நீயும்  கொண்ட 
மென்சோகத்தை.

திருமதி. சுபாசுரேஷ்
16.12.1977 --  29.05.2010 
      

Sunday 4 April, 2010

அது ஒரு மழைக்காலம்.


மழை நின்று நெடு நேரம்,

முறிந்த மரக்கிளை கொத்தி சாய்க்க
குருவி துடிக்கும்.

கரை காணாது பயணம் தொடரும்
யாரோ அனுப்பிய காகித கப்பல் .

நனைந்த மேக கூந்தல்.
தூபம் போடும்,
குடிசைகள் அணைத்த சமைத்த நெருப்பு.

உறவு அறுந்து உதறிய
செருப்பு ஒன்று, ஒற்றையாய்  .

ஓநாய்கள் பயமின்றி ஓடும்
நனைந்த ஆடுகள்.

முழுக்க நனைந்தும் முக்காடிட்டு பலர்.

விலக்க மறந்து , வீதியில்
குடை பிடித்து இன்னும் சிலர்.

எல்லாம் ,
அவசரமாய் அடையப்போகும்
அடுத்த மழைக்குள்
கூடு நோக்கி .

எனில் ,
அது ஒரு மழைக்காலம்
.

Tuesday 30 March, 2010

காத்திருந்த ( வேலை) வேளை

நேர்முக தேர்வு காத்திருப்பில்
கவனம் சிதைத்த கன்னியிடம்
இயல்பாய் இருப்பதுபோல்
காட்டிக்கொள்ள ,

அவள் பெயர் தெரிந்துகொள்ளாமலும்
என் பெயர் தெரியப்படுத்தாமலும்
எதேதோ பேசி, பேசி
கடந்தேன்
பொழுதையும் , சலனத்தையும்.


டிஸ்கி :
1. இது ஒரு தி.மு.க ( அதாவது எனது கடமை, கண்ணியம்
கட்டுப்பாடு பற்றிய அல்லது திருமணத்துக்கு முந்திய
விதை என பொருள் கொள்ளவும்).
 ஹீ .. ஹீ . ஹீ

Thursday 25 March, 2010

எப்பொருள் யார் , யார் வாய் கேட்பினும்.......

ஒரு மகனுக்கு தந்தை செய்யும் முக்கிய கடமை , திருமணம் செய்து வைப்பதுதான் . அந்த வகையில் நானும் , எனது மனைவியும் சேர்ந்து ஒரு நல்ல பெண்ணை( அனுஷா), துரைக்ககாத் தேர்ந்தெடுத்தோம் . துரையிடம் கேட்டு அவருக்கு பிடித்து, அதன் பின்பு தற்போது நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது" ----- 28.03.2010 தேதியிட்ட ஜூனியர் விகடனில் ஒரு பேட்டியில் தனது மகனின் திருமணம் பற்றிய கேள்விக்கு திரு. அழகிரி அவர்களின் பதில்.

"அனுஷாவுக்கும் , எனக்கும் ரெண்டு வருஷ காதல். யாருக்கும் தெரியாம நாங்க காதலிச்ச அவஸ்தை இருக்கே"- 31.03.2010 தேதியிட்ட குமுதம் இதழில் தன் காதல் அனுபவம் பற்றி திரு. துரை தயாநிதி.

மேலும் அந்த கட்டுரை, "அப்பாவோட துணிச்சலில் ஐந்தில் ஒரு பங்காவது பையனுக்கு இருக்காதா என்ன. பிடிச்ச பெண்ணுக்கு நூறு முறை ஐ லவ் யு சொல்லி, அம்மாவையும் , அப்பாவையும் அந்த காதலுக்கு கன்வின்ஸ் பண்ணி தன் காதலை நிறைவேற்றிகொண்டார் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் புதல்வர் துரை தயாநிதி" என்று துரை தயாநிதியின் காதல் கதையை கட்டுரையாக்கிருக்கிறது.

பத்திரிக்கை மற்றும் வார இதழ்களில் வரும் செய்திகளில் காணப்படும் பொருள் முரண் பற்றி விளக்கவே , இந்த செய்தி சுட்டி காட்டப்பட்டுள்ளது.
இதில் பேட்டி கொடுத்தவர்கள் முரணனான செய்திகளை சொன்னார்களா , அல்லது சம்பந்த பட்ட வார இதழ்கள் தங்களது கற்பனை கலந்து செய்தியை தந்தார்களா என்று தெரியவில்லை.

தமிழ் நாட்டில் பிரபலமான ஒரு குடும்பத்தை பற்றிய செய்தியிலேயே பொருள் முரணுடன் செய்தி வருகிறது என்றால் , மற்ற செய்திகளின் நிலைமையை எவ்வாறு மதிப்பிடு செய்வது.

போகட்டும் , உண்மை தெரிந்தவுடன் சம்பந்த பட்ட இதழ்கள் , அதை பற்றிய திருத்தமோ அல்லது தவறுக்கு வருத்தமோ தெரிவிக்க போவதில்லை . ( அவர்களுக்கு தெரியும் , இதல்லாம் யார் கவனிக்க போறாங்க , இதை விட முக்கியமா கவலைப்பட , நிறைய விசயங்கள் இருக்குல்ல , செல்லம்மா ஹோட்டல் நல்ல நடக்குதா, திருமதி. செல்வத்துக்கு குழந்தை பொறக்குமா, பொறகதான்னு .)

மேற்படி , திரு. துரை தயாநிதி(காதல் ) திருமண நிச்சயதார்த்த செய்தியின் பொருள் முரண் காரணமாக தமிழகத்தின் பொருளாதாரம் தடுமாறப்போவதில்லை என்றாலும் , தினமும் காலையில் உலக அறிவை வளர்த்துகொள்வதற்காக காசு கொடுத்து தின பத்திரிகை , வார இதழ்களை வாங்கும் அப்பாவிகளை (என்னை போன்ற ) நினைக்கும் போது தோன்றிய கவலையில் தான் இந்த பதிவு

இதை போலத்தான் ஒரு மாதத்திற்கு முன் , ஜூனியர் விகடனில், ஜாமீன் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் குருக்கள் தான் செய்த தவறுக்கு வெட்கப்படுவதாகவும், இனி இதை போன்ற செயல்களை கனவில் கூட நினைக்க போவதில்லை என்று தனது வக்கிலிடம் சொல்லி அழுததாக ஒரு கட்டுரையில் செய்தி.

அதே வாரத்தில் வந்த நக்கீரனில் , ஜாமீன் கிடைத்தவுடன் காஞ்சிபுரம் குருக்கள் , தான் செய்தது ஒன்றும் பெரிய தவறில்லை என்றும் இன்னும் பல காம களியாட்டங்களை தான் அரங்கேற்றும்முன் போலீஸ் தன்னை பிடித்து விட்டதை எண்ணி வருத்த படுவதாகவும் தென வெட்டாக போட்டி அளித்தது போலவும் செய்தி.

இவைகளை பார்க்கும் பொழுது பத்திரிக்கை துறையின் மீதும் , அவை தரும் செய்திகளின் நம்பக தன்மை மீதும் சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

பத்திரிக்கை தர்மம் என்ற ஒன்றை இனியாவது கடைபிடித்து,பாவப்பட்ட வாசகனின் பார்வைக்கு உண்மை செய்திகளை தர பத்திரிக்கை உலகம் இனியாவது முயற்சி செய்யட்டும் .

Friday 26 February, 2010

ஆதாம் கேலி

மின் தொடர் வண்டி நெரிசல்
விலக்கி,
இறங்கி போகும் பெண்கள் ,

ஆண் கூட்ட அக்குள் வாடையை
அருவருப்பாய் மூக்கை மூடி
அம்பலப்படுத்தி போவதும் ,

பாலியல் வன்மமாய்தான்
படுகிறது எனக்கு.

Wednesday 10 February, 2010

நாங்களும் (காதல்) ரௌடிதான்














காதலர் தினம் வரதுனால , இங்க , யூத்துகளும், யூத்து , யூத்துனு சொல்லிக்கிற பெர்சுகளும் காதல் கவிதை எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு , தூள் கிளப்ப தயார இருக்குற , இந்த நேரத்துல , நாமளும் ரௌடி தான்னு ப்ரூப் பண்ண வேண்டிய கட்டாயத்தால , குளத்துல .. சாரி , களத்துல குதித்தாச்சு.

இனி ..... ஒரு காதல் அனுபவத்திற்கு தயாராகுங்கள் ...........

உயிர்த்தெழ, மீண்டும்
வேண்டும்
தேவதை.
******
தேவதைகள் காற்றில்
மிதந்துதான் வருவார்களாம்.
காதில் கேட்ட செய்தி.
நீ நடந்தல்லவா வருகிறாய்
மாறாக,
உன்னை பார்த்ததும்
நானல்லவா
மிதந்து கொண்டேயிருக்கிறேன்
காற்றில் தினமும் .
*********
தினமும்
நீ அலுவலகம் நுழைந்தவுடன்
'ஹாய்' சொல்லும் அழகை காண
அலைகிறது மனசு
பேயாய் .
*********
"பேய்"
ஒரு அழகிக்கு
நான் வைத்த செல்ல பெயர்.
தெரியும் , சொன்னால்
பேசாமல் போவாய்
என்னுடன்.
**********
என்னுடன் பேசும்போதெல்லாம்
ஏதாவது புத்தகம் ஒன்றை
இறுக்கி அணைத்தபடி பேசுகிறாயே,
பரிசோதித்துதான் பாரேன்
புத்தகங்களை விட
நான் மென்மையானவன்.

சொன்னவுடன் ,
பரிசளித்து போனாய்
உன் வெட்கத்தை .
***********
உன் வெட்கத்தை
தயவு செய்து
வீட்டிலேயே விட்டு வா
நீ வெட்கப்படும் அழகை
வேடிக்கை பார்த்து
வேலைகள் ஏதும் நடக்காது
முடங்கிபோகிறதாம்
அலுவலகம் .
*********
அலுவலக வாகனத்தில்
ஜன்னல் ஓரங்களை
தவிர்த்துவிடு நீ.
உன் ஓர விழி வீச்சில்
விபத்துக்கள் நேரலாம்,
உனை தொடரும் எனக்கு.
*********
எனக்கு   பிடித்த  நடிகை  படத்தை 
உன் கம்ப்யூட்டர் டெஸ்க் டாப்பில்
எனக்காய் வைத்திருக்கிறாயே
உனக்காய், நீ ரசிக்கும் நடிகரின் 
படம் , நான் வைத்திருக்கும்
ரகசியம் தெரியுமா , உனக்கு
********
உனக்கு மட்டும் அழகாய்
அமைந்துவிடுகிறது
சோம்பல் முறிப்பு
வேலை முடித்து
********.
வேலை முடித்து
இருக்கை விட்டு
எழ நீ எத்தனிக்கும் போதே
இறந்துபோகிறது என் மனசு.
**********
உயிர்த்தெழ, மீண்டும்.........
......
                          
                 

Sunday 7 February, 2010

ஜீவகாருண்யம்



அரு  பட்டு  அடங்கும்
ஆட்டு குட்டிகளை
அதி  காலையிலே
கசாப்பு கடைக்கு போன காரணத்தால்
காண நேர்ந்தது

மனசு வலிக்க, மாமிசம் மறுத்து
வீடு திரும்பினேன்,

அடுத்த வாரமாவது ,
அறுத்த பின்னே சென்று
அசைவம் வாங்க வேண்டுமென்று.

புலிகளை காப்போம்


இந்தியராகிய நமக்கெல்லாம் மிக பெரிய பொறுப்பு , கடமை காத்திருக்கிறது.


வீரத்தின் அடையாளமாக அறியப்பட்ட புலியினம் , சுயநல சூழ்ச்சிகாரர்களால் முற்றிலும் அழித்தொழிக்கபட்டிருக்கிறது


தற்போதைய கணக்கின் படி சுமார் 1411 புலிகள் மட்டுமே ஜீவித்திருப்பதாக அறிவிக்கபட்டுருக்கிறது. இன்னும் உலகம் முழுதும் பரவி கிடக்கும் புலி கணக்கு வெளி வர நாளாகும்.


வெள்ளை புலி , கரும் புலி என்று அனைத்தையும் ஒன்றிணைத்து அவைகளின் இனம் வாழ, வளர நாம் உதவ வேண்டும் .


இந்நிலையில் , தமிழர்கள் ஆகிய நாம் எல்லாரும் ஒன்று பட்டு புலி இனம்காக்க சபதம் ஏற்போம் .


டிஸ்கி : மேலே சொல்லப்பட்ட செய்தியை அரசியல் கண்ணோட்டத்தில் படித்து விட்டு , தவறாக அர்த்தம் கொண்டால் , கம்பனி பொறுப்பாகாது.



Tuesday 26 January, 2010

எ பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா ஆ.. ஆ .. ஆ..........
















அபூர்வமாய் நீ 
அமைத்துக்கொள்ளும்
பிரயாணங்களால் ,
தனித்திருக்கும்
தருணங்கள் முழுதும்
"வீடு" பற்றி
விளங்கிக்கொள்ள
முடிகிறது என்னால்.

For U - Its  AWAY  FROM  HOME
For Me - Its  A" WAY "  TO  " HOME" 

Saturday 16 January, 2010

குழந்தைகளின் கேள்விகள்


குழந்தைகள் உலகம்
முழுதும்
குவியலாய் கேள்விகள்.

அவர்களின்
எல்லா கேள்விகளின்
பதில் நம்மிடம் இருப்பதில்லை
என்றாலும்,
நமக்கு பதில் தெரிந்த
எல்லா கேள்விகளையும்
அவர்கள் கேட்பதுமில்லை

சில வினாக்களின் வீச்சு
விசாலமாய்
சில விடைகளின் தேடல் போல்.

பதில் தெரியா கேள்விகளை ,
சமயங்களில்
தப்பாய் பதில் சொல்லி
சமாளிக்கலாம்,
புன்னகைத்து நகரலாம்,
எரிச்சலாய் மறுக்கலாம்.

என்றாலும் ,

பதில்லா கேள்விகளில்
நம் மனசு மாட்டிக்கொள்ள
அவர்கள்
அடுத்த கேள்விக்கு
ஆயத்தமாகி கொண்டிருப்பார்கள்.

காக்கை சோறு










அமாவாசை பூசை முடித்து
அப்பா காக்கைக்கு
இலை நிறைய வைத்த சோற்றை
எடுத்ததா, இல்லையா
கவலையில்,

வீதி கடக்கும்
பிச்சைக்காரன் குரல்
விழுவதேயில்லை
காதில்.

Thursday 14 January, 2010

இக்கரை பச்சை











என்றேனும் வாரக்கடைசி
பெருநகர் அரவமற்ற
வட்ட சாலை
வழிநடக்க,
ஊர் ஞாபகம் உள்ளுக்குள்.

பச்சைவயல் பாதை
நெட்டை மரம்,குட்டைகோயில்
ஆச்சரிய கண்களோடு
அன்பான மக்கள் என்று.

ஊர் போய், உண்டு களைத்து
ஊர் கதை கேட்டு
விட்டம் பார்த்து
விழுந்து கிடக்க,
இதயத்தின் ஓரத்தில்
இன்னிசை போல்
நகரத்து இரைச்சல்

பட பட என நடக்கும்
பட்டாம் பூச்சி பெண்கள்.
இடைவிடாது பேசும்
எப்.எம் குரல்கள்.

பறக்கும் ரயில் பர பரப்பு
பாதையோர சாப்பாடு

மாமு, மச்சிகள்
சபலப்படுத்தும் சமாச்சாரங்கள்.

இரவுகளை காவு வாங்கி
காசு கொடுக்கும்
கம்ப்யூட்டர் கடமைகள்

வழி இன்றி வகுத்த
வாழ்வின்விலாசங்கள்.

இயல்பாய்போகிறது
இந்தஎந்திரவாழ்க்கை
இனிமையாய்
இருப்பதாலும் கூட
.

Friday 8 January, 2010

30 + ( முப்பது பிளஸ் )











எங்கேயோ, எப்பொழுதோ
சந்திக்கின்ற பொழுதும்
எதை பற்றிபேசுவது
என புரியாமல்
கல்லூரி நாட்களில்
எங்களை காதலித்ததாய்
நினைத்த பெண்களை
பேசி பிரிவோம்
அவர்களுக்கு
மணமாகி போன போதும்.


Wednesday 6 January, 2010

பொய் இலக்கணம்









மழை துளி, மலர் சிதறல்
சுமந்த மறைவான சாலையில்
உன் விரல் உரச நடக்கையில்
உணர்ச்சிவசப்பட்ட என்னை
நாசூக்காய் தவிர்த்து
நடந்து போனாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

காபி கடையில்
அருகமர்திருந்தபொழுது,
உன் தந்தை கண்டு பதறிய
என்னை அமைதியாக்கி
அருகில் அழைத்துபோய்
அறிமுகப்படுத்தினாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

"இந்த புத்தாண்டிலாவது
அச்சம் தவிர்,உரக்க சொல்

 உலகுக்கு உன் காதல்"
 நள்ளிரவில்
குறுஞ்செய்தி கொடுத்தாயே
அது
நினைவிருக்கிறது எனக்கு.

தலை குனிந்து, தாலி வாங்கி
சோக புன்னகையுடன் ,
ஜோடியாய் போனாயே 
 அது
நினைவிருக்கிறது எனக்கு.



இருந்தாலும்,

 வருடம் தோறும்
வாழ்த்து சொல்ல,
உன் திருமண தேதி மட்டும்
என் மனைவி
ஞாபகப்படுத்தும்வரை
நினைவுக்கு வருவதில்லை எனக்கு.

Monday 4 January, 2010

மன் மதன்














வினையின் விடை
பாவங்களாய்

குற்றவாளிகள்
பாவம்
குறி வைக்கப்பட்டவர்களே

தண்டனை இல்லாது
தப்பி

தொடர்கிறான்,
தொடுக்கிறான்

கணை தொடுப்பு
காலகாலமாய்
.

Sunday 3 January, 2010

குற்ற உண (ர் )வு



அலட்சியமாய் அதிகம் சொல்லி,
உணவகங்களில்
உண்ணாது வீணடித்த,

எஞ்சில் தட்டுக்களை
எந்திரம் போல்
எடுத்து போகின்றவனின்
பசி உணர்ந்த பார்வைகளை

பல் குத்தும் பாவனையில்
தவிர்த்து விடுகிறேன்
எப்பொழுதும்
.